பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டத்திற்கான தனது பதிலை ஈரான் இன்று (10) பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவும் இந்த மோதலைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகிறது.
இதற்கமைய, பாகிஸ்தானின் ஊடாகவே இந்த பதில் அறிக்கை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அமைதியை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஈரானின் பதில் குறித்த விரிவான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு முக்கியமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பதில் அறிக்கையைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டுள்ளதை இஸ்லாமாபாத் உறுதிப்படுத்தியுள்ளது.
