சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸொன்றை இயக்கிய தற்காலிக சாரதி நேற்று (07) மாலை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – திக் ஓயா சலங்கந்த பகுதியில் இருந்து தினசரி சேவையில் ஈடுபடும் குறித்த பஸ்ஸின் வழக்கமான சாரதி, பயணத்தின் இடைப்பட்ட பகுதியில் சாரதி உரிமம் இல்லாத நபரிடம் வாகனத்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர் பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாதை செங்குத்தான மலைச்சரிவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளைக் கொண்டதுடன், அடிக்கடி விபத்துகள் பதிவாகும் அபாயகரமான மார்க்கமாகவும் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராகவும், சாரதி உரிமம் இல்லாத ஒருவரிடம் பஸ்ஸை இயக்க அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராகவும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.
