நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற தனித்தனி சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் – ரம்பேவ வீதியின் கல்வல சந்திக்கு அருகில், ரம்பேவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வலப்புறமாக திரும்ப முயன்றபோது பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல – கெக்கிராவ வீதியின் 21ஆம் கட்டைப் பகுதியில், கெக்கிராவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் தேவஹவ பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞர் உயிரிழந்தார்.
மேலும், கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி மீது எதிரே வந்த பஸ் மோதியதில் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், தம்புள்ளை – புப்பொகம வீதியின் அனகட்டாவ பகுதியில் லொறியை முந்த முயன்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் தேவஹவ பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
