நாடு முழுவதும் அமைந்துள்ள 1,000 தொல்பொருள் தளங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதனுடன் இணைந்த தொல்பொருள் இருவார நிகழ்ச்சியும் இன்று (07) முதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க, இலங்கையின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு, அவற்றில் அகழாய்வு, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என தெரிவித்தார்.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 1,000 தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படவுள்ளன. அதன் முதல் கட்டமாக, இன்று தொடங்கிய தொல்பொருள் இருவார நிகழ்ச்சியின் போது அடையாளம் காணப்பட்ட 100 தளங்களில் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தொல்பொருள் மரபுகளை பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு ‘சமூக பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் முன்வைக்கும் யோசனைகள் மற்றும் கருத்துகள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
