யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் காலத்தை இழுக்கடிக்காது துரிதப்படுத்த கோரி பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் ஒன்று இன்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்றலில் இன்றைய தினம் (09) வியாழக்கிழமை காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர், மாணவிகளை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி பல்கலைக்கழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” , “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” , “குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே” , “கண்ணியத்தை இழந்து கல்வியை தரும் இடமா யாழ் பல்கலைக்கழகம்? , “தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டர்களுக்கு மவுனம் ஏன்? போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
