கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அவசரமாக எடுத்துள்ள முடிவானது கண்டி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து, நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடி நூடுல்ஸ் சமைப்பது போன்ற ஒரு தற்காலிகத் தீர்வினை அரசு தேடியுள்ளது.
100 வருடங்களுக்கும் மேல் பழமையான இக்கட்டடத்தைப் புனரமைக்க மக்களின் வரிப்பணம் பில்லியன்கணக்கில் வீணடிக்கப்படவுள்ளது.
தலதா மாளிகை அமைந்துள்ள புனித பூமியின் மையப்பகுதியில் இருக்கும் இச்சிறைச்சாலை, சமூக மற்றும் கலாசார நகர அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே கடந்த 2014ஆம் ஆண்டு மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் பல்லேகல பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், 1876இல் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட இக்கட்டடம் காலனித்துவப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த உயர் மதிப்புமிக்க நிலத்தில், ஜப்பானிய நிதியுதவியுடன் சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை உள்ளடக்கிய ‘கண்டியன் அரீனா’ பன்னோக்கு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல்வேறு நெருக்கடிகளால் அது தடைப்பட்டது.
திறைசேரியில் பணம் இருப்பதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், அந்தப் பணப் பெட்டிகளைப் பூட்டி வைக்காமல், கண்டி மக்களின் நலனுக்காகவும் 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இத்திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் காணப்படுகின்றனர். அதற்குப் போகம்பரை சிறையைத் திறப்பது தீர்வல்ல. சிறைகளில் உள்ள 75 சதவீதமான விளக்கமறியல் கைதிகளின் நெருக்கடியைக் குறைக்க மாற்று வழிகளைக் கையாள வேண்டும்.
குறிப்பாக, மிகச் சிறிய குற்றங்களுக்காகச் சிறு தொகைப் பிணைப்பணத்தையோ அல்லது அபராதத்தையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடும் கைதிகளுக்காக ஒரு நாளைக்கு தலா 1,500 ரூபாய் வீதம் அரசு செலவிடுவதை விட, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைப் போல ‘பிணை நிதியம்’ ஒன்றை உருவாக்கி அவர்களை விடுவிப்பதும், வீட்டுக்காவல் முறையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்திற்கே நிதி ரீதியாக இலாபகரமானது.
கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தியை 100 வருடங்கள் பின்னோக்கித் தள்ளும் இப்பிற்போக்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
