மூதூர் வாராந்த சந்தையில் அழுகிய மரக்கறிகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு திங்கட்கிழமை (13) அழிக்கப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எம். ஹஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது, வைத்தியர் என்.எம். ஹஸ்ஸாலி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூதூர் வாராந்த சந்தையை ஆய்வு செய்தனர்.
இதன்போது, மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 500 கிலோ உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் மற்றும் காலாவதியான ஒரு நூடுல்ஸ் பொதியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் முறையாக அழிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
