கொழும்பு போர்ட் சிட்டியில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதரகம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உண்மைகளை விரைவாகக் கண்டறியும் வகையில் இலங்கைப் பொலிஸார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இலங்கையில் வாழும் சீனப் பிரஜைகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வ உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகள் பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி, தேவையான உதவிக்காக சீனத் தூதரகத்தையும் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் காணாமல் போன சீனப் பிரஜையின் சடலம் இன்று எஹெலியகொட பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த நபர் மேலும் இருவருடன் கடத்தப்பட்ட நிலையில், மற்ற இருவர் காயமடைந்த நிலையில் கைவிடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
