பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. தனிநபர் ஒருவரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்வது தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காகவே சகல நீதிபதிகளின் பதவிக் காலத்தையும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. இது முற்றிலும் தவறானது.
அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சியால் நீதித்துறைக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று நீதியமைச்சர் வினவுவது ஆச்சரியமாகவுள்ளது.
பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தற்போது எடுத்துள்ளது.
நிறைவேற்றுத்துறையின் தீர்மானத்துக்கு அமைவாகவே நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவுள்ளது. இது தவறானதொரு எடுத்துக்காட்டாகும். விரும்பியோ அல்லது விரும்பாமலோ நீதித்துறை நிறைவேற்றுத்துறையின் விருப்பத்துக்கு அமைய செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்றார்.
