உண்மையான மக்கள் ஆதரவை அறிய தேர்தலே ஒரே வழி எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கருத்துக்கணிப்புகள் அல்ல, வாக்குப்பெட்டியே மக்களின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பரிசோதிக்கும் சிறந்த வழி தேர்தல் என தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய அவர், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு திருத்தங்களை ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் எனவும், சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை புறக்கணிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு கட்சியுடனும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என தெரிவித்த அவர், தேசிய நலனை முன்னிறுத்தும் தரப்புகளுடன் வெளிப்படையான முறையில் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
