சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டஅனர்த்தங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் , வீட்டுக்குள் இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர நேற்று (03) உறுதிப்படுத்தினார்.
அத்துடன், கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.
