கொழும்பு – இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்காகக் கொண்டு இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்ட நிலையில், ஒன்று முற்றத்தில் விழுந்து வெடித்ததுடன், மற்றைய கைக்குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், வீட்டின் வெளிப்புறப் பகுதிகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், வெடிக்காத கைக்குண்டை பாதுகாப்பாக மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தனிப்பட்ட பகை, பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் அல்லது கப்பம் கோரல் உள்ளிட்ட பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் பொலிஸார், தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
