11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2027ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அறிவித்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற தனிநாயகம் அடிகள் நினைவரங்கில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழி அமைப்பு ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவனர் தனிநாயகம் அடிகளார் அந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்ததுடன், அவர் பங்கேற்ற இறுதி மாநாடாகவும் அது அமைந்தது.
1974ஆம் ஆண்டு மாநாட்டின் இறுதி நாளில் இடம்பெற்ற தாக்குதலில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட சம்பவமும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற நிலையில், 11ஆவது மாநாடு மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
