நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகிலுள்ள அபாயகரமான வளைவில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், வீதியை அகலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். டிட்வா சூறாவளியால் ஹக்கல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் வீதி சேதமடைந்து தாழிறங்கியுள்ள நிலையில், குறுகிய வீதி காரணமாக தொடர்ந்து விபத்துகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
முதலாவது விபத்தில், நுவரெலியாவில் இருந்து வெலிமடை நோக்கி அதிக சுமையுடன் பயணித்த கனரக வாகனத்தின் தடையாழி செயலிழந்ததால், நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இரண்டாவது விபத்தில், ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே வீதியோரமாக நடந்து சென்ற 46 வயதுடைய ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். அதே பகுதியில் நேற்று (02) மாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் காரும் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளதாகக் கூறுகின்றனர். வீதி மிகவும் குறுகியதாக இருப்பதால் எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு இடமளிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மண்சரிவால் சேதமடைந்து தாழிறங்கிய பகுதிகளை புனரமைப்பதுடன், வீதியை அகலப்படுத்தி பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
