அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லோரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பற் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் மற்றும் கடல்சார் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளை இருவரும் சந்திக்கவுள்ளனர். அத்துடன், 8ஆவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டியல் மாநாட்டில் லோரா டிபெல்லா உரையாற்றவுள்ளதுடன், ரொபர்ட் ஜே. ஹார்வி மாநாட்டின் குழுவொன்றில் பங்கேற்கவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் ஊடான கப்பற் போக்குவரத்தில் இலங்கை முக்கிய பங்கு வகிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகம் ஊடாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் கொள்கலன்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பானதும் வினைத்திறனானதுமான கப்பற் போக்குவரத்து அமெரிக்க வர்த்தகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய வர்த்தக மையமாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1961ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழு, அமெரிக்காவின் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தும் சுயாதீன அரச நிறுவனமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
