24 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருந்த சதொச நிறுவனம் தற்போது இலாபமீட்டும் நிலைக்கு முன்னேற்றப்பட்டுள்ளது. அதேவேளை 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சானக மதுகொட எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது மாதாந்தம் 160 மில்லியன் நட்டம் என்ற நிலையிலேயே சதொச நிறுவனம் காணப்பட்டதுடன் சில தரப்பினருக்கு 11 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருந்த நிலையில் 5 பில்லியன் ரூபா வங்கி மேலதிகப் பற்றும் இருந்தது.
அந்த நிலையை மாற்றி, அண்மைக் காலமாக அந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் முக்கியமான பல இடங்களில் பொருத்தமான, வசதிகள் உள்ளடங்கிய இடங்களைத் தெரிவு செய்து அவற்றை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி நிலவரப்படி நாடு முழுவதும் 424 சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஏனைய சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு இணையானதாக சதொச நிறுவனத்தை முன்னேற்ற வேண்டுமானால் சகல வசதிகளையும் கொண்ட கட்டிடமாக அது அமைவது அவசியம். அதற்கு பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான நடவடிக்கைகளையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.
ஏனைய நிறுவனங்களை விட சதொச நிறுவனத்தில் பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தாலும் கடந்த வாரம் முதல் சதொச விற்பனை நிலையங்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
எனினும், சதொச நிறுவனம் தொடர்பில் பொதுமக்களிடையே காணப்பட்ட நம்பிக்கை தற்போது குறைந்துள்ளதாகவும், பல சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.
