முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி கொழும்பில் அமைதியான வழியில் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைக்க முயல்கிறது என்றும், இதனை முதன்முதலில் எதிர்த்த கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் திருத்தமானது ஒரு கட்சி ஆட்சியை நிறுவுவதற்கும், பெலவத்தையில் அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதற்குமான ஒரு முயற்சி என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு உள்ள 159 ஆசனங்களைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இந்தத் திருத்தத்திற்கு எதிராகப் பரந்த அளவிலான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பப்போவதாக உறுதியளித்தார்.
செப்டம்பர் 24ஆம் திகதி நடத்தப்படும் போராட்டம் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்றும், இது அரசாங்க மாற்றத்திற்கான ஒரு பரந்த முயற்சியின் தொடக்கமாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
