சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை காட்டுமாறு இலங்கையின் ஐந்து முக்கிய ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய தலைமைத்துவத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement), தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (South Asian Women in Media), இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்(Sri Lanka Working Journalists Association), தமிழ் ஊடகக் கூட்டணி(Tamil Media Alliance) மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடகப் பேரவை (Sri Lanka Muslim Media Forum)
ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.
சவூதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறையை தாங்கள் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், அனோஜனின் வழக்கில் ஆழமான மனிதாபிமான பரிமாணமும் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளன. மதங்களுக்கான மரியாதை, மத நல்லிணக்கம், பொறுப்பான கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றுக்கான தமது உறுதிப்பாட்டையும் அவை வலியுறுத்தியுள்ளன.
இஸ்லாத்தில் கருணை, மன்னிப்பு, மனந்திரும்புதல் மற்றும் இரக்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ஊடக அமைப்புகள், அனோஜனின் உயிரைக் காப்பதற்காக சவூதி அரேபிய அதிகாரிகள் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியுள்ளன. அதேவேளை, இலங்கை அரசாங்கம் உயர் மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளன.
அனோஜனின் வழக்கு தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர் பாதுகாப்பாக தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஊடக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
