முல்லைத்தீவு உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (06) மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சென்ற 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கேட்டறிந்ததுடன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து மூன்று வைத்தியர்கள் உண்ணாப்புலவு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதேச சபை உறுப்பினர் பவுள்ராஜ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
