மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த மாத ஆரம்பத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது
மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள்தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் என்பன திருடப்பட்டுள்ளதுடன், கோவில் உண்டியல்களிலும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
மேலும் பகல்வேளைகளிலும் சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் செல்லும் போது, சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப் படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
