யாழ்ப்பாணம், சித்துபாத்தி, செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில் தேவையான சந்தர்ப்பங்களில் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (8) கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறும் அகழ்வுப் பணிகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே சர்வதேச விசேட நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளையும் தேவையான ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் DNA பரிசோதனைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான காலக்கட்டங்களை கண்டறிவதற்கும் விசேட நிபுணர்களின் உதவி பெறப்படும் எனவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
