பிரான்ஸின் பாரிஸ் நகரில் கல்வி வசதிகளை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஸ்டில் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் தடியடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை, நெரிசலான வகுப்பறைகள், பாடசாலைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்த கவலைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸில் உள்ள ஹெலன் புஷே உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் மாணவர்கள் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தித் தடைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தி அவர்களைக் கலைத்துள்ளனர்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சின் தகவலின்படி, செப்டெம்பர் மாத இறுதியிலிருந்து இதுவரை 6,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மேலதிக ஆசிரியர்களை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், போராட்டங்கள் தொடர்கின்றன.
