இலங்கை விஞ்ஞானி தேமிய நாணயக்கார, இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப் பழமையான அதிவேக வானொலி வெடிப்புகளில் ஒன்றைக் கண்டறிந்த சர்வதேச ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
FRB 20240304B எனப் பெயரிடப்பட்ட இந்தச் சமிக்ஞை, 2024ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் MeerKAT வானொலித் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது. பின்னர், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் உதவியுடன் அதன் மூலத்தை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர்.
இந்தச் சமிக்ஞை, பிரபஞ்சம் உருவாகி சுமார் 300 கோடி ஆண்டுகள் கடந்திருந்த காலத்தில் இருந்த ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து வந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த அதிவேக வானொலி வெடிப்புகள், மிக அதிகமான ஆற்றலை வெளியிடக்கூடியவை. இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி கலாநிதி மனிஷா கலேப் தலைமையிலான இந்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பு, சர்வதேச அறிவியல் இதழான Science இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியையும் அதன் கட்டமைப்பையும் புரிந்துகொள்வதற்குப் புதிய வழிகளைத் திறக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
