இலங்கையில் இந்த ஆண்டு 23,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹபரணை மகா வித்தியாலயத்தில் புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்வித் துறையின் மனித வளங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்த அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாணவர்கள் பரீட்சைகளில் வெற்றி பெறுவதோடு மட்டுமன்றி, பொறுப்புள்ள குடிமக்களாக உருவாகும் வகையில் கல்வி அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்முனைவோர் திறன் மற்றும் நிதி அறிவு போன்ற விடயங்களுக்கும் கல்வியில் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஆசிரியர் நியமனங்களுக்கான விண்ணப்பத் திகதிகள், தகுதிகள் மற்றும் தெரிவு நடைமுறைகள் தொடர்பான மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
