குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல், காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் தலைமையில், சம்மேளனத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த வழக்கின் முறைப்பாட்டாளராகவும், ஆரம்பம் முதல் அதன் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து செயற்பட்டு வருபவருமான சம்மேளனத் தலைவர் றஊப், வழக்கின் தொடக்ககால நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை மற்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார். அத்துடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் என சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் இதன்போது வலியுறுத்தினார்.
நீண்டகாலமாகத் தேக்கமடைந்திருந்த இந்த வழக்கை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமும் நிகழ்வில் உரையாற்றினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்னார்வ அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் தற்போதைய சட்ட நிலைமை, ஆரம்பகட்ட முன்னெடுப்புகள் மற்றும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் குடும்ப உறவினர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். மேலும், உறவினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சத்தியக்கடதாசி மூலம் வழக்குடன் இணைந்துள்ள 35 பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தங்களை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தமது நலன்களைப் பாதுகாக்கவும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் ஆவணங்களைத் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.

இதற்கமைய, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமும், அவர் பெயரிட்டு நியமிக்கும் ஏனைய சட்டத்தரணிகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான இந்த அதிகாரமளிப்பு, வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
