நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 350 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை தற்போது 600 முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அதேபோல், 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் குடை மிளகாயின் விலை 400 முதல் 450 ரூபா வரையிலும், 150 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.
கொழும்பு மெனிங் பொதுச் சந்தையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கோழி இறைச்சி மற்றும் முட்டை கொள்வனவு 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபா வரை காணப்படுகின்ற போதிலும், சந்தைக்கு முட்டைகள் விநியோகிக்கப்படும் விலைகளால் உற்பத்தியாளர்களுக்கு இலாபம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
