காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் வான்பாயும் மட்டத்தை அண்மித்துள்ளதாகப் பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே, நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர், நீர்வரத்து மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.
