ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டார அலுவலகத்தில் முதன்மை மேலாளராகப் பணியாற்றும் பிரதீப் முண்டேஜா, பல்வேறு சவால்களைக் கடந்து எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
தனது நீண்டகாலக் கனவான இந்த இலக்கை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி அவர் எட்டியுள்ளார். இதற்காகப் பல மாதங்களாகக் கடுமையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மனரீதியான பயிற்சிகளை மேற்கொண்டு தன்னைத் தயார்படுத்தியுள்ளார்.
ஏறுவதற்குக் கடினமான மலைப்பாதைகள், கடும் குளிர், கணிக்க முடியாத வானிலை மற்றும் மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமங்கள் எனப் பல சவால்களை எதிர்கொண்டே அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
7 வயது முதல் செவித்திறன் குறைபாடு
தனது சாதனைப் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் முண்டேஜா, தனது 7 வயது முதல் காது கேட்கும் திறன் இல்லாதபோதிலும், அது தனது இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையில் சவால்கள் இயல்பானவை என்றாலும், அவை ஒருவரின் இலக்குகளைத் தீர்மானிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மலைப்பயணம் தனது சகிப்புத்தன்மையைச் சோதித்ததுடன், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களையும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான தயாரிப்பு, விடாமுயற்சி மற்றும் முதல் அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் ஆகியவை இருந்தால் கடினமான இலக்குகளையும் அடைய முடியும் எனத் தெரிவித்த அவர், “கனவுகளுக்கு ஒருபோதும் காலாவதி தேதி கிடையாது” என்ற ஊக்கமளிக்கும் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், இந்தச் சாதனைப் பயணத்தில் தமக்கு ஆதரவாக இருந்த ஐந்து குழு உறுப்பினர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
