ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், உணவக உரிமையாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செங்கலடி பொது சுகாதாரப் பணிமனையின் கீழ் ஏறாவூர் நான்காம் பிரிவில் கடமையாற்றும் குறித்த பரிசோதகர், அப்பகுதியிலுள்ள உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதன்போது சுகாதாரமற்ற நிலையில் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உணவக உரிமையாளர், குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரைப் பொலிஸாரிடம் சிக்கவைத்து பழிவாங்கும் நோக்கில் இருவருக்கு பணம் வழங்கி இந்தச் செயலைச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கமைய, கடந்த 26ஆம் திகதி ஏறாவூர் நான்காம் பிரிவிலுள்ள பாடசாலை வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு முன்னால் பொது சுகாதாரப் பரிசோதகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தபோது, அங்கு சென்ற இருவரும் அதன் அடிப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூன்று சிறிய பொதிகளை ஒட்டிவைத்துள்ளனர்.
இதனை அவதானித்த பொது சுகாதாரப் பரிசோதகர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொதிகளைப் பரிசோதித்தபோது அவற்றில் ஐஸ் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்து போதைப்பொருளை மறைத்து வைத்த இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், ஏறாவூர் ஆறாம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளைப் பெற்றுக்கொண்ட இடம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
