ஆட்சிக்கு வந்தவுடன் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் மீதான 18 சதவீத பெறுமதி சேர் வரியை (VAT) குறைப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி இரண்டு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், புதிய வரிகள் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட கிங்ஸ் நெல்சன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் மீதான VAT வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் அதனை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
