கலிபோர்னியாவில் உள்ள வீடொன்றின் வாசலில் பலவீனமான மற்றும் அச்சமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்த ஆந்தை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்டபோது, அதன் கருமையான கண்களில் நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானத்தைப் போன்ற ஒளிரும் புள்ளிகள் காணப்பட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்வை இழப்பு காரணமாகவே அதன் கண்களில் இந்த விசேட தோற்றம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வானத்தின் கடவுளின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஆந்தைக்கு ‘ஜியுஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அதன் உயிரை காப்பாற்றிய போதிலும், பார்வையற்ற நிலையில் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டால் அது உயிர்வாழ முடியாது என கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜியுஸ் ஆந்தைக்கு விலங்குகள் காப்பகமொன்றில் நிரந்தர புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
பார்வையை இழந்திருந்தாலும், அமைதியான குணமும் மனிதர்களின் அருகாமையை விரும்பும் தன்மையும் கொண்ட இந்த ஆந்தை, தனது தனித்துவமான கண்களால் ஆயிரக்கணக்கான மக்களின் அன்பையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
