மஹர சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தில் ஒரு கைதி உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வருகை தந்து கைதிகளின் நிலை குறித்து விசாரித்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் இருந்த சில கைதிகள் கற்களை வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்து சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காயமடைந்த கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைதியின்மையின் போது கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கட்டடம் ஒன்றுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியிலும் ராகம வைத்தியசாலையிலும் ஒன்று திரண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வமான முழுமையான அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
