பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் கையாளும் நோக்கில் ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ பொது பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் அமைச்சு வளாகத்தில் இந்த சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் கட்டணமில்லா 118 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 118.pubsec.gov.lk என்ற இணையத்தள ஊடாக தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை இந்த சேவை ஊடாக முன்வைக்க முடியும்.
மேலும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் ரகசியத்தன்மையுடன் 118 சேவை ஊடாக வழங்க முடியும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக பொது பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தவறான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
