இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பை, நான்கு முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் மூலம் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 132 கிலோமீற்றரால் விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2 முக்கியப் பிரிவுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான 37 கிலோமீற்றர் நீளமுள்ள முதல் கட்டப் பகுதியும், பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான 33 கிலோமீற்றர் நீளமுள்ள மூன்றாம் கட்டப் பகுதியும் இதில் அடங்கும்.
மேலும் குருணாகல் – கலேவெல இடையிலான 38 கிலோமீற்றர் பிரிவின் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
233 பில்லியன் ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் 12 ஒப்பந்தப் பொதிகளாகப் பிரிக்கப்பட்டு, வெளிப்படையான விலைமனுக்கோரல் முறையின் கீழ் உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களைக் கொண்டு விரைவாகச் செயற்படுத்தப்படும்.
அத்துடன் 24 கிலோமீற்றர் நீளமுடைய இந்த திட்டத்தின் பணிகளும் இந்த ஆண்டிற்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டின் நிலையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் மூலோபாய வளர்ச்சிக் கொள்கை சட்டகத்திற்கு அமைவாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
