கொலன்னாவை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஒருகொடவத்த – அம்பத்தலை பிரதான வீதியில் மூன்று முக்கிய பாலங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு நகருக்குள் நுழையும் முக்கிய வீதிகளில் ஒன்றான இந்த வீதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் வீதி மற்றும் பாலங்களை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், 2/3 களு பாலம் மற்றும் 9/1 பாலத்தின் நிர்மாணப் பணிகள் 2025 ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அவை 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 4/1 பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் 2026 பெப்ரவரி 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2027 மே மாதத்தில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று பாலங்களுக்காக ரூ.1,546 மில்லியன் செலவிடப்படவுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியம் (OFID) மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியம் (SFD) ஆகியவை இத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகின்றன.

திட்டம் நிறைவடைந்த பின்னர் ஒருகொடவத்த, வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை, அங்கொட, கல்வான மற்றும் அம்பத்தலை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் குறைந்த நேரத்தில் தங்களது இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7.7 கிலோமீற்றர் நீளமான ஒருகொடவத்த – அம்பத்தலை பிரதான வீதியில் மொத்தம் எட்டு பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

எட்டு பாலங்களின் நிர்மாணப் பணிகளுக்காக மொத்தம் ரூ.2.5 பில்லியன் செலவிடப்படுவதுடன், பாலங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு இணையாக பிரதான வீதியை காபட் செய்து அபிவிருத்தி செய்வதற்காக மேலும் ரூ.4.2 பில்லியன் செலவிடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையிலும் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ELS Construction நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
