மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற தனது 19 வயது மகனை பெற்றோர் தடுக்க முயன்றபோது, தந்தையும் மகனும் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதுடன் தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாலுஜ் எம்.ஐ.டி.சி-யின் கீழ் உள்ள திஸ்கான் பகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காவல்துறையினரின் விசாரணைகளில், குணால் முரளிதர் சந்த்குடே (19) என்ற இளைஞன் பெற்றோரிடத்தில், கைத்தொலைபேசி வாங்கித்தருமாறு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் காலை 10 மணியளவில் மலை மீது ஏறியுள்ளார்.
சத்ரபதி சம்பாஜிநகரின் ஜல்தா ஃபாட்டா பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களான முரளிதர் சந்த்குடே (48) மற்றும் சங்கீதா சந்த்குடே ஆகியோர் அவரைத் தடுக்க அங்கு வந்துள்ளனர்.
குறித்த இளைஞனை காவல்துறையினரும் கிராம மக்களும் சமாதானப்படுத்த முயற்சித்த நிலையில், தீயணைப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு, மலையின் கீழே வலை விரிக்க முயற்சித்த போதும் குறித்த இளைஞன் மலையில் வேறு வேறு பகுதிகளுக்கு தனது திசையை மாற்றிக்கொண்டுள்ளார்.
இதன் போது தந்தை அவனைத் தேற்றி சமாதானப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்த போதே , இளைஞன் குதித்துள்ளார். அவனைத் தொடர்ந்து சென்ற தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
