கஹத்துடுவ – கொரலைம கிரிவத்துடுவபகுதியில் 78 வயது முதியவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கெஸ்பாவ பகுதியில் வைத்து கஹத்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹத்துடுவ பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கெஸ்பாவ – கிண்டெல்பிய பாலத்திற்கு அருகில் பதுங்கியிருந்த போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் கொரலைம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதியன்று அவர் இரும்புத் கம்பியால் பலமாகத் தாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் உயிரிழந்த முதியவரின் 17 வயது சிறுவனுடன் இணைந்து நீண்ட காலமாக போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று போதைப் பொருள் பாவிப்பதற்காக குறித்த சிறுவனை அவர் அழைத்த போதிலும் சிறுவன் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபர் சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதன்போது, தனது பேரனை காப்பாற்றுவதற்காக முயன்ற முதியவரை சந்தேக நபர் அதே இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேக நபர் ஹொரணை ஊடாக நடந்துச் சென்று இரத்தினபுரி மாவட்டத்தை அடைந்துள்ளார். மறுநாள் பெல்மதுளையைச் சென்றடைந்த அவர் அங்கிருந்து பேருந்து மூலம் எம்பிலிபிட்டியவுக்கு சென்று தனக்கு பரிட்சயமான ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
பின்னர் கடந்த 21 ஆம் திகதி காலை பேரூந்து மூலம் கொழும்பிற்கு வந்து பொரலஸ்கமுவ பகுதிக்கு சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டத்திற்கு தப்பியோடும் நோக்கத்துடன் கெஸ்பாவ கிண்டெல்பிய பாலத்திற்கு அருகே பதுங்கியருந்த வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்யப்பட்ட நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரை கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கஹத்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
