வடக்கு மாகாணத்திற்கு வரும் முதலீட்டாளர்கள் நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தாமதமின்றி உரிய அனுமதிகளை வழங்குவது அரச நிறுவனங்களின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ஊர்காவற்றுறை பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீடுகள் வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் கவலைகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தக் கூடாது எனவும், திட்டங்களின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியான விளக்கங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடல் வளங்கள் குறைந்து வரும் நிலையில், மீன் வளர்ப்பு சார்ந்த முதலீடுகள் எதிர்காலத்தில் கடற்றொழில் சமூகங்களுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குறித்த திட்டம் தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதி ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியில் பொதுமக்களுடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
