பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாணத்தில் நிலவும் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
வடக்கு மாகாணத்தில் அதிகளவான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுதாலும், ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்படாமையினாலும், பாடசாலைகளில் காணப்படுகின்ற பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களை துரிதகதியில் திருத்துவதில் இடர்நிலைகள் காணப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சீர்செய்வதோடு ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி அமைச்சரான பிரதமரிடம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய,பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எழுப்பிய கேள்வி மிகவும் பொருத்தமானது. இலத்திரனியல் சாதனங்களைத் திருத்துவதற்கு எமக்கு ஆசிரியர்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது அதற்காக ஆசிரியர்களை பணிக்கமர்த்துவதற்கான வேலைகளை மூன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக இந்தக் குறைபாடு தீர்க்கப்படும்.தற்போது குறித்த ஆளணி சேர்ப்பிற்கான பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த வருடமே அதற்குரிய செயற்பாடுகள் முடிவுறும்.
தற்போது காணப்படுகின்ற அந்த ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையில், ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை இந்த வருடத்திற்குள்ளேயே நிரப்பப்படும்.அதேவேளை அந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றோம்.மேலும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்புவசதிகள், கருவிகள் பழுதுபாரத்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாணசபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகள் கோரினால் மேலதிக நிதியும் ஒதுக்க முடியும் என குறிப்பிட்டார்.
