ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் தொடர்புகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அரச தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தடயவியல் விசாரணைகளின்போது ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான எயார்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மின்னஞ்சல்கள், குறித்த விமானக் கொள்வனவு நடவடிக்கையில் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு செயற்பட்டார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவான CIABOC மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களும் விசாரணையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் விசாரணையாளர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், 2013 மார்ச் 23ஆம் திகதியிடப்பட்ட ஏர்பஸ் நிறுவனத்தின் மின்னஞ்சல் ஒன்றும் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில், அப்போதைய ஜனாதிபதியின் மகன் எனக் குறிப்பிடப்பட்ட ஒருவர், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான எயார்பஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டை “ஜனாதிபதி ஊடாக” அமைச்சரவைக்கு முன்வைப்பதாக உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
எயார்பஸ் விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணம் தொடர்பாக, சிங்கப்பூரிலுள்ள Biz Solutions என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு வைக்கப்பட்டதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்த வழக்கின் மற்றொரு சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பணத்தில் 800,000 அமெரிக்க டொலர்கள், வர்த்தகர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்குக்கு பின்னர் மாற்றப்பட்டதாகவும் அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்குமூலத்திலும் சத்தியப்பிரமாண வாக்குமூலத்திலும் குறிப்பிட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
எனினும், அரச தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பணம் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டி, நாமல் ராஜபக்ஷவுக்கு பணம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும், தனது கட்சிக்காரருக்கு எதிரான அரச தரப்பின் வழக்கையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.
இந்தப் பணமோசடி விசாரணையில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இரு தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு செப்டெம்பர் 23ஆம் திகதி வழங்கப்படும் வரை அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
