2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரே, இந்திய அணிக்காக தான் விளையாடும் இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலி, டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு ஆபிரிக்கக் கண்டத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், 2027 உலகக் கிண்ணத்தை வெல்வதே தனது முழுமையான இலக்கு என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் வழங்கி, உலகக் கிண்ணத்தை வெல்ல தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தனது கிரிக்கெட் பயணம் முடிந்துவிட்டது என்ற எண்ணம் ஒருபோதும் தமக்கு ஏற்படாது எனவும் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தாம் விளையாடிக் கொண்டிருக்கும் வரை எதிர்பார்ப்பதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் எனவும், தற்போது எதிர்வரும் உலகக் கிண்ணத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகக் கிண்ணம் போன்ற ஐ.சி.சி. தொடர்களில் வெவ்வேறு அணிகளுடன் விளையாட வேண்டியிருப்பதுடன், வெவ்வேறு மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதனால், ஒவ்வொரு தொடருக்கும் வித்தியாசமான முறையில் தயாராகி, மாறுபட்ட அணுகுமுறையுடன் சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும், அதுவே மிகப்பெரிய சவால் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
