அஹூங்கல்ல – வெலிக்கந்த பகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், பாதாள குழு உறுப்பினர் அஹூங்கல்லே லொக்கு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டி உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நேற்று (1) இரவு 8.10 மணியளவில் மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நடந்து வந்த சந்தேகநபர் ஒருவரே வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய வெலிகந்த பகுதியைச் சேர்ந்த லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார த சில்வா எனும் பொடி பெட்டி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழந்த நபர், டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மே 4 ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு தலைவர் எனவும் அறியப்படும் லொக்கு பெட்டியின் சகோதரர் எனத் தெரியவந்துள்ளது.
9MM ரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹூங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அஹூங்கல்ல போகஹாபிட்டிய பகுதியில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியன்று இடம்பெற்ற சித்திரை புதுவருடக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, இரவு முச்சக்கர வண்டியொன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பொடி பெட்டியை இலக்குவைத்து இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அவர் உயிர்த்தப்பியிருந்தார்.
அத்தோடு, பத்தேகம பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று காலி குற்றப்புலனாய்வு பிரிவில் கையெழுத்திட்டு முச்சக்கர வண்டியில் மீளத் திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கார் ஒன்றில் வருகை தந்திருந்த சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், லொக்கு பெட்டியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த களுநோனி எனும் பெண்ணும், அவரது தாயார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவர் என அறியப்படும் சோபன ஹந்தி ஜயலத் த சில்வா எனும் கரந்தெனிய சுத்தாவின் பாதாள குழு துப்பாக்கித்தாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், பொடி பெட்டி மீதான துப்பாக்கிச் சூடும் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
