இலங்கைக் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 19 ஈரானியக் கப்பல்களில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இந்தக் கப்பல்கள் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ, குறித்த கப்பல்களுக்கு உடனடியாக உதவி வழங்குவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இவ்வாறான உதவிகளை வழங்கும்போது நாட்டின் தேசிய நலன்கள் மற்றும் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடமிருந்து நேரடியாக எந்தவொரு எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய அவசியம் ஒருபுறம் இருக்க, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளையும் இலங்கை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தக் கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எத்தகைய தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
