இலங்கையின் மூன்று தசாப்தகாலப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இன்னமும் சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆய்வறிக்கையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மனிதப்புதைகுழிகள், இராணுவமயமாக்கல் மற்றும் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்மையையும் நீதியையும் கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், மனிதப்புதைகுழி விசாரணைகளைத் துரிதப்படுத்தவும், தடயவியல் பரிசோதனைகளை வலுப்படுத்தவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணி உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கவும், இராணுவமயமாக்கலைக் குறைத்து சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
