ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் மாபெரும் மோசடி! மக்களே உஷார்!
மக்களே உஷார்! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் போலி செயலியை உருவாக்கி, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி மொபைல் செயலி மூலம் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இந்தத் தகவலை சி.ஐ.டி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மோசடிக்காரர்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், பிராண்ட் மற்றும் மயில் சின்னத்தைப் பயன்படுத்தி இந்தப் போலி செயலியை உருவாக்கியுள்ளனர்.

விமான டிக்கெட்டுகளை வாங்கினால் 50 சதவீத தள்ளுபடி அல்லது பணம் திரும்பப் பெறலாம் என ஆசை காட்டி பொதுமக்களை இந்தச் செயலியில் பதிவு செய்ய வைத்துள்ளனர்.
இதற்காக ஆரம்பக் கட்டணமாக வெறும் 250 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அதன் பின்னர்தான் மிகப்பெரிய ஆபத்து காத்திருந்துள்ளது!
செயலியில் பதிவு செய்தவர்களின் தனிப்பட்ட தகவல்களும் வங்கிக் கணக்கு ரகசியங்களும் திருடப்பட்டு, அவர்களது அனுமதியின்றி கணக்குகளில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி தெரிவித்துள்ளது.
சிலர் தங்களது கையடக்கத் தொலைபேசிகள் வழக்கத்திற்கு மாறாகச் சூடாவதையும், மின்கலத்தின் மின்சக்தி விரைவாகக் குறைவதையும் கவனித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடிப் பரிவர்த்தனைகளுக்காகத் தங்களது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த சிலரைப் பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
அதேவேளை, போலி செயலியை இயக்கிய முக்கிய சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
