இலங்கையின் ஹபராதுவை, கொக்கல பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட பேருந்து மீது ரயில் மோதியதில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற இந்த விபத்தின்போது, மாணவர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 61 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.
கொக்கல பகுதியில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர், குறித்த குழுவினர் கொட்டாவ பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் 41 மாணவர்கள், 14 தனியார் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் 6 பெற்றோர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 14 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் சிகிச்சைக்காக காராபிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய பேருந்துச் சாரதியும், 21 வயதுடைய நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
