இலங்கையில் 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பின்படி, 7,27,293 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டொக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், செவிப்புலன் கருவிகள் கொள்வனவுக்காக 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீடற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவியாக அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதுடன், வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கும் மலசலகூட வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, மருத்துவ உதவி, தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
