கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள தனியார் 5 மாடி கட்டிடமொன்றின் மேலதிக கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மேற்படி விபத்தின் போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது இரும்பு மற்றும் சிமெண்ட் கான்கிரீட் இடிபாடுகள் வீழ்ந்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வைத்தியசாலை குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி தலைமையக பொலிஸார் , இந்தக் கட்டுமானப் பணிகள் பாதுகாப்பாற்ற முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் மேலதிக நிர்மாணப்பணிகள் எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் அவசரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
