எதிர்வரும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையில் தீவிரமான வறட்சி நிலை உருவாகக்கூடும் நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் K.G. தர்மதிலக, இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை இதுவரை காணாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
அதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள பிரதான நீர்நிலைகள் பெருமளவில் வற்றிப்போகும் அபாயம் நிலவுவதாகவும் அவர் எச்சரித்தார்.
அவசர நிலைகளில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தற்போது உள்ள நீர் விநியோக வாகனங்கள் போதுமானதாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீர்வளங்கள் முற்றிலும் குறையும் சூழ்நிலை ஏற்பட்டால், கடல் நீரை சுத்திகரித்து விநியோகிக்கும் திட்டத்தை பரிசீலிக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த பத்து ஆண்டுகளில் காணப்பட்டதைக் காட்டிலும் பலமான எல் நினோ நிலைமை உருவாகக்கூடும் வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
