நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், இத்திட்டத்தின் கீழ் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 6,100 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பட்டம் பெற்றவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கூறினார்.
மேலும், கல்வித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் கல்வி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களையும் படிப்படியாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மட்டுமே போதுமானதல்ல என்றும், ஆசிரியர் இடமாற்றம், கல்வி நிர்வாகம் மற்றும் தரவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
கல்வித்துறையில் அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
